The Origin and Growth of Sarah Tucker Hr. Sec. School Since 1858

“ அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணக் கூடும் ? ”

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சாராள் தக்கர் என்ற பெண்மணியின் தியாகத்தாலும், விருப்பத்தாலும் உருவாக்கப்பட்ட பள்ளி நம் பள்ளி. அம்மையாரின் சகோதரர் Rev. John Tucker C.M.S மிஷனெரியாக சென்னையில் பணிபுரிந்து வந்தபோது, இங்கிலாந்திலிருக்கும் தன் சகோதரிக்கு இந்தியப் பெண்களின் பரிதாப நிலையை விளக்கி கடிதம் எழுதினார். அக்காலத்தில் பெண்கள் விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். உயர்குல பெண்கள் மட்டுமே நல்ல உடை உடுத்தவும், கல்வி கற்கவும் முடிந்தது. ஆகவே பெண்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். இந்த தகவல் செல்வி சாராள் தக்கர் அம்மையாரின் மனதை வருத்தியது. கருணை உள்ளம் கொண்டு தனது நண்பர்கள் உதவியுடன் 20 பேரிடமிருந்து 24 Sovereign சேகரித்து சகோதரனுக்கு அனுப்பினார். அம்மையார் அனுப்பிய பண உதவியால், 1843ல் தூத்துக்குடி மாவட்டம், முதலூர் அருகே கடாட்சபுரம் கிராமத்தில் பெண்களுக்கென்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிறுவப்பட்டது. இப்பள்ளியில் செல்வி c.c. கில்பர்ன், செல்வி சோபியா ஹோர்ப்ஸ் பணியாற்றினர். ஆசிரியர் பற்றாக் குறையால் இப்பள்ளி மூடப்பட்டது. இப்பள்ளியின் பெண் பிள்ளைகள் பாளையங்கோட்டை ஆண்கள் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த முறை பயனுள்ளதாகக் காணப்படாததால் பாளையங்கோட்டை சேகர குரு Rev. சார்ஜென்ட் பெண்களுக்கென ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிறுவ முனைந்தார். இந்தக் கால கட்டத்தில் சாராள் தக்கர் அம்மையார் 1857 ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி இவ்வுலகை விட்டு கடந்து சென்றார். அம்மையார் இந்திய மண்ணில் கால் பதிக்கவே இல்லை.

அம்மையாரின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அம்மையாரின் நெருங்கிய தோழிகள் மரியா, சோபியா, ஜோயன்னா ஆகியோர் ஒரு குழுவை அமைத்தனர். சாராள் தக்கரின் பெயரில் பெரிய நிறுவனம் துவங்க 268 Sovereign மற்றும் 17 Shillong நன்கொடையாக C.M.S அனுமதியுடன் Rev. John Tucker க்கு அனுப்பி வைத்தனர். Rev. Tucker அந்த நன்கொடையை Rev. Edward Sargent ஐயர் அவர்களிடம் கொடுத்தார்கள். சென்னைக் கமிற்றியின் அனுமதியுடன் கோட்டைக்குத் தெற்கில் நிலம் வாங்கினார்கள். அந்த நிலம் லிம்ஜிபாய் தாஸ்பாய் என்ற பார்ஸி வணிகருடையது. அவ்விடத்தில் 1858ல் சாராள் தக்கர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பு Rev. ஆஸ்டின் டிப் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. Rev. சார்ஜென்ட் ஐயரால் நிரந்தர கட்டிடத்திற்கான அஸ்திபாரம் 1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி போடப்பட்டது. கட்டிட வேலை 1863 ஆம் ஆண்டு முடிவடைந்தது. செல்வி மெரிடித் ஆசிரியராக பணியாற்றினார். சாராள் தக்கர் நிறுவனம் போதனா முறைப்பள்ளி, பயிற்சிப்பள்ளி, (1-3 வகுப்பு வரை) சாதாரண பாடசாலை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டதாகக் காணப்பட்டது. சாராள் தக்கர் பள்ளி Rev. சார்ஜெண்ட் ஆலோசனையில் Miss ரிச்சர்ட்ஸ் அவர்களால் கவனித்து வரப்பட்டது. Rev. ஸ்பார்ட் அய்யரின் மனைவி மேரி ஸ்பார்ட் உதவி ஆசிரியையாகப் பணிபுரிந்தார்கள். சாராள் டக்கர் பயிற்சி பள்ளி (1-3 வகுப்பு வரை) 1867ல் தொடங்கப்பட்டது.

1867ல் Rev. Lash மற்றும் Mrs. Lash அவர்களின் வழிகாட்டுதலின்படி வேகமாக வளர்ந்தது. நம் ஆசிரியரியப் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு மதுரை, தஞ்சாவூர், சென்னை, இலங்கை, மொரிஷியஸ் போன்ற இடங்களில் வேலை கிடைத்தது.

1870ல் ஏப்ரல் மாதம் அடைக்கலாபுரத்தில் முதல் கிளைப்பள்ளி தொடங்கப்பட்டது. 1873ல் பாளையங்கோட்டையில் S.T.C. கிளைப்பள்ளி ஒன்று அஸ்போர்ன் சகோதரிகளால் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அநேக கிளைப்பள்ளிகள் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வேலைக்காக உருவாக்கப்பட்டன.

1871ல் பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டு Rev. Lash ஆசிரியர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்த உறைவிடப் பள்ளியைத் தொடங்கினார், செல்வி A.J. ஆஸ்க்வித் அம்மையார் சாராள் தக்கர் நிறுவனத்தின் மேலாளராக 1890ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஒருநாள் கண் தெரியாத பையன் பள்ளி வளாகத்தில் பிச்சை கேட்க நுழைகிறான், தான் வந்த இடம் கல்விக் கூடம் என்பது தெரிந்ததும் தானும் கல்வி கற்க வேண்டும் என்று கேட்கிறான். அவனுடைய உள்ள வேட்கையை அறிந்த அம்மையார் இங்கிலாந்து சென்று பார்வையிழந்தோர் கற்க உதவும் Braile எழுத்து முறையை கற்றுக் கொண்டார்கள். 1890 ஆம் ஆண்டிலிருந்தே கண் தெரியாதோர் பள்ளி வளாகத்தினுள் சேர்க்கப்பட்டனர். இவரோடு செல்வி, பிளாரன்ஸ் சுவெய்சன் அம்மையாரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள். செவித்திறன் குன்றியோர் மீதும் இவர்களின் கவனம் திரும்பியது. செல்வி பிளாரன்ஸ் ஸ்வெய்சன் 1895ம் ஆண்டு நம் பள்ளி வளாகத்தினுள்ளே செவித்திறன் குன்றியோர் பள்ளியைத் தொடங்கினார்கள்.

1890 ஆம் ஆண்டு சாராள் தக்கர் நிறுவனம் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. செல்வி வால் ஃபோர்டு இங்கு நூலகராகப் பணியாற்றினார். பள்ளி மாணவிகள் நூலகத்தை நன்கு பயன்படுத்த கற்பிக்கப்பட்டது.

1896 ஆம் ஆண்டு ஆஸ்க்வித் அம்மையாரின் தலைமையின் கீழ் எம்பள்ளி கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. சாராள் தக்கர் கல்லூரியின் முதல் முதல்வர் செல்வி A.J. ஆக்ஸ்வித் அம்மையார். Madras University ன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. செல்வி A.M.Naish பள்ளி மற்றும் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார்கள்.

இடநெருக்கடியால் ஆரம்பப்பாடசாலை, போதனாமுறைப்பள்ளி ஆகியவை பழைய பேட்டைக்கு Rev. G.T. செல்வின் மற்றும் அவரது நண்பர் Rev. M.V. ஜான் என்பவர்களால் மாற்றப்பட்டது. அந்த இடத்திற்கு ஊழியஸ்தானம் என்று பெயரிடப்பட்டது.

1896 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் பள்ளி வளாகத்திற்குள் சிற்றாலயத்துக்கென அடிக்கல் மாவட்ட ஆட்சியரின் மனைவி Mrs. Higgins என்பவரால் நாட்டப்பட்டது. சிற்றாலயம் 14" July 1897 அன்று திறந்து வைக்கப்பட்டது. பள்ளி சிற்றாலயத்தில் காலை 7.30 மணிக்கு விடுதிகளில் சமைப்போர், தோட்ட வேலை செய்பவர்களுக்கு செல்வி R.E.Howard அம்மையார், செல்வி M.M.Frost அம்மையார், செல்வி M.L. பாசன் அம்மையார், செல்வி E.M. சேம்பர்ஸ் அம்மையார் ஆகியோர் முறை வைத்து தமிழிலேயே ஆராதனை நடத்துவார்கள். சிற்றாலய மணி மாவட்ட ஆட்சியர் குடும்பத்தினரால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது. இந்தச் சிற்றாலயம் கட்ட விடுதி மாணவியர்கள் காலை உணவோடு தங்களுக்கு வழங்கப்படும் வாழைப்பழத்தை 6 மாத காலம் தியாகம் செய்து பணம் கொடுத்தனர். நாளடைவில் இங்கு உழைத்த ஆங்கிலேய மிஷனெரிகள் அநேகர் தங்கள் சொந்த நாடு திரும்பினர். ஆனால் R.E. Howard அம்மையார் மட்டுமே பாளையங்கோட்டையில் தங்கி இறுதி வரை பணியாற்றினார்கள். நம் பள்ளி சிற்றாலயத்தில்தான் அம்மையாரின் அடக்க ஆராதனை நடைபெற்றது. அம்மையாரின் சரீரம் மிலிட்டரி லைன் கிறிஸ்து ஆலய வளாகத்தில் தேவனுடைய நாளுக்கென்று விதைக்கப்பட்டுள்ளது. இச் சிற்றாலயம் இன்றும் நுழைவாயிலில் அமைந்து நம்மை வரவேற்கிறது. இந்த ஜீவ தண்ணீர் சிற்றாலயம் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி மறுமங்கல படைப்பு செய்யப்பட்டது.

பள்ளி வளாகத்தினுள் கம்பீரமாய் இன்றளவும் பள்ளியின் பெருமையைப் பறை சாற்றும் இன்றைய High School Block, அன்றைய பிரதான கட்டிடம். 1900 November 26 கர்சன்பிரபு - அரசு பிரதிநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பள்ளியாக அவருக்கு அளித்த வரவேற்பில் மாணவர்கள் ஆடிய சிம்லா புகழ் Maypole நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

1908-1910 வரை செல்வி வால்ஃபோர்ட் அம்மையார் பள்ளி, கல்லூரிகளைத் திறம்பட நடத்தினார்கள். 1910ல் வால்ஃபோர்ட் அவர்களால் சாராள் தக்கர் முன்னாள் மாணவிகள் சங்கம் உருவாக்கப்பட்டது.

1916-1931 வரை செல்வி ரேச்சல் ஈடித் ஹாவர்ட் அம்மையாரின் காலம். இவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்... C.M.S. சங்கத்தாரிடம் சம்பளம் வாங்காமலே இங்கு பணிபுரிந்தவர். ஆங்கிலம், சித்திரம் வரைதல், வண்ணம் பூசுதல் கற்றுக் கொடுப்பார்கள். காலை 7.30 மணிக்கு ஆர்மோனியம் வாசித்து மேற்கத்திய நடனம் கற்றுக் கொடுப்பார்கள். Howard அம்மையார் அனைவரையும் dear, chellam, கண்ணே என்று அன்போடு அழைப்பார்கள். இவர் தம் கல்வி சேவையைப் பாராட்டி இவருக்கு Kalzer - 1 - Hind தங்கப்பதக்கம் இந்திய அரசால் வழங்கப்பட்டது. அம்மையாரின் நினைவால் பள்ளி வளாகத்தினுள் Howard Memorial Block 1937 ல் N.M, Hewit அம்மையாரால் கட்டி முடிக்கப்பட்டது.

1931-1936 செல்வி E.M. சேம்பர்ஸ் அம்மையாரின் காலம். அம்மையாரின் அடையாளமே புன்சிரிப்புதான். இவர் ஒரு சிறந்த சாரணர், மாணவிகளுக்கு சாரணப் பயிற்சி கொடுப்பார்கள். "நீ ஒரு சிறந்த மாணவனாக வேண்டுமென்றால் சிறந்த கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்" எனக் கற்றுக் கொடுப்பார்கள். விடுமுறைக்குக் கொடைக்கானல் போன சமயம் தவறி விழுந்து நடக்க முடியாமல் போனபோதும். சக்கர வண்டியிலை பள்ளி வளாகம் முழுவதையும் சுற்றி வந்து பணி செய்யதார்கள்.

இங்கிலாந்திலிருந்து நற்செய்திப் பணியாளராக செல்வி M.L. பாசன் மில்ரெர்ட் லூயிஸ் பாசன் அனுப்பப்பட்டார்கள். அம்மையார் நம் பள்ளி வளாகத்தில் 1900 - 1938 வரை 38 ஆண்டுகள் தங்கியிருந்து சிறப்பாக பணியாற்றினார்கள். ஆங்கிலப் பாடம் கல்லூரி, உயர்நிலை வகுப்பு மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். குழந்தைகளுக்கென்று தனியாக Nursery School ஆரம்பித்து நற்செய்தியைக் குழந்தைகளுக்கும் அறிவித்தார்கள். மேலும் இவர் ஷிஜிசி கிளைப்பள்ளிகளின் நிர்வாகியாகவும் செயல்பட்டார்கள்.

செல்வி M.M. ப்பிராஸ்ட் (Miss. Maud Muriel Frost) (1920 - 1932) நற்செய்திப் பணியாளராக சாராள் தக்கர் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஆங்கிலம் அழகுற கற்பிப்பார்கள். இருவரும் அப்போது தலைமை ஆசிரியராயிருந்த செல்வி. ஜாய் சாலமோன் அம்மையாரும் (1915 - 1932) நெருங்கிய நண்பர்கள். இவரின் சிறப்பு இரவு ஏழு மணிக்கு மேல் உயர்நிலைப்பள்ளியின் மேல் மாடிக்குச் சென்று வானசாஸ்திரம் கற்றுக் கொடுப்பார்கள். நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். இருவரும் அந் நாட்களில் நற்செய்தி பரப்ப வந்த சாது சுந்தர்சிங் அவர்களின் செய்தியால் ஈர்க்கப்பட்டு தங்கள் பணிகளைத் துறந்து சாயமலை என்னும் கிராமத்தில் விடிவெள்ளி ஆசிரமம் ஒன்றை நிறுவினார்கள். வசதி வாய்ப்பு இல்லாத இடத்திலும் கிறிஸ்துவின் நற்செய்தியை சந்தோஷமாய் இறுதிவரை அறிவித்தார்கள்.

செல்வி N.M. ஹீவிட் அம்மையார் காலத்தில் கல்லூரி அதிக வளர்ச்சி கண்டது. தற்போதைய வளாகம் கல்லூரிக்கு போதுமானதாக இல்லை என்பதால் 1947 ஆம் ஆண்டு பெருமாள்புரத்தில் 40 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, 1948ல் கல்லூரி அங்கு மாற்றப்பட்டது. கல்லூரியின் முதல் இந்திய முதல்வராக Mrs. T. தேவதாசன் அம்மையார் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சாராள் தக்கர் கிளை நிறுவனங்களின் மேலாளராக 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தார்கள். 1932 - 1942 வரை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார்கள்.

இவர்களோடு பாடும் திறன் மிகுந்த செல்வி. அனி லின்சி அம்மையார் 1936 ஆம் ஆண்டு முதல் 1958 ஆண்டு வரை பல ஆண்டுகள் பள்ளி தாளாளராக பள்ளிக்கு மாபெரும் பணி செய்துள்ளார்கள்.

Mrs. கிருபை எட்வர்ட், Mrs. புஷ்பம் அருமைநாயகம், Mrs. கான்ஸ்டான்ஸ் தேவவரம், Miss. குளோரி தாமஸ் , Miss. அலிஸ் சாமுவேல், Mrs. நிர்மலா நவராஜ், Mrs. ஜெசி ஜெயக்குமார், Mrs. லலிதா தேவி ஜஸ்டின், Mrs. மேக்தலின் மார்க்ரெட் அதிசயமணி , Mrs. ஜெயசீலி ராஜபாய், Mrs. ஜெயசீலி ஜாய் , Mrs. M. ஷீலா, Mrs. கிறிஸ்டில்டா கிறிஸ்துதாஸ், Mrs. நூர்ஜிபாய் எபனேசர் தலைமை ஆசிரியைகளாகப் பணியாற்றி பள்ளியைத் தென்னிந்தியாவின் தலைச்சிறந்த பள்ளியாக மாற்ற அயராது உழைத்தார்கள்.

தற்போது Mrs. வசந்தாமேரி அவர்கள் தலைமை ஆசிரியையாக தலைமை வகித்து பள்ளியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

சிறிய கடுகு விதையாய் ஆரம்பிக்கப்பட்ட எம்பள்ளி இன்று பெரிய ஆலமரமாய் அநேக விழுதுகளைக் கொண்டு சமுதாயத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயர்நிலைப்பள்ளியாகி 160 ஆண்டுக்கும் மேலான பள்ளியே! சுவிசேஷப் பணியோடு உன் கல்விப்பணி இன்னும் தொடரட்டும். தேவனே! சகல கனமும், மகிமையும் புகழும் உமக்கே உண்டாவதாக! ஆமென்.

Back to Blog